கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை


கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 21 April 2018 3:15 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்ததில் கார் சேதம் அடைந்தது. இது போல் செல்போன் கோபுரம் 2 துண்டாக உடைந்தது.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. பகலில் அனல் காற்று வீசியது. கடும் வெப்பத்தால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் கோவை மாநகர பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.

ஆனால் கோவையை ஒட்டியுள்ள சரவணம்பட்டி, கோவில்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம், தொண்டாமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கணபதி, சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னல் மற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தது. இதன்காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பலத்த காற்று வீசியதால் சரவணம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்தது. மேலும் பலத்த காற்றில் கேபிள் வயர்களும் அறுந்து சாலையில் விழுந்தன.

கோவை கணபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த 50 ஆண்டு பழமையான புங்கைமரம் நேற்று வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் யாரும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

கணபதி கணேஷ் லே-அவுட் 3-வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 54). இவருடைய வீட்டின் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று வீசிய பலத்த காற்றில் அந்த செல்போன் கோபுரம் 2 துண்டாக உடைந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தது. கோவை காந்தி மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மரம் ஒன்று விழுந்தது. கோவை கரும்புக்கடை சவுகார்நகர் பகுதியில் சத்துணவு கூடத்தின் மேல் அருகில் இருந்த மரக்கிளை விழுந்து அந்த கட்டிடம் சேதம் அடைந்தது.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி குப்பிபாளையம், கஸ்தூரிபாளையம் ஜோதிபுரம், விவேகானந்தபுரம் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் நேற்று மாலை பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கொட்டியது. மேலும் மாலை 5 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது.

நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்த போது பேரூர் ஆலமர பஸ்நிறுத்தத்தில் உள்ள மர அறுவை மில் சிமெண்டு சீட்டு கூரையின் மீது மரம் விழுந்தது. அப்போது மில்லுக்குள் 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அதே பகுதியில் மற்றொரு மரம் முறிந்து மின் கம்பம் மீதும் விழுந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த மின்சார வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இதைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப் பட்டு சாய்ந்து கிடந்த மின் கம்பம் நேராக நிறுத்தப்பட்டது.

இது போல் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே இருந்த மரம், பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு கொண்டசாமி நகரில் இருந்த ஒரு புளியமரம் ஆகியவை முறிந்து விழுந்தது.

கோவை துடியலூர், தொப்பம்பட்டி, வடமதுரை, பன்னிமடை, பாப்பநாயக்கன்பாளையம், சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பழனிகவுண்டன்புதூர் நேதாஜிநகரில் முனுசாமி (வயது56) என்பவரின் வீட்டு மாடியில் பந்தல் போடப்பட்டு இருந்தது. நேற்று மழை பெய்த போது ராட்சத மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் மாடியில் போடப்பட்டு இருந்த பந்தல் மற்றும் வீட்டின் முகப்பு பகுதி லேசாக சேதமடைந்தது.

பன்னிமடை முதல் பாப்பநாயக்கன்பாளையம் வரையிலான சாலையில் 4 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் 2 மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மதுரா நகரில் ஞானபிரகாஷ் (48) என்பவர் வீட்டின் மீது மரம் விழுந்ததில் கதவு சேதமடைந்தது. துடியலூர் பகுதியில் மட்டும் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 50 மரங்கள் சாய்ந்தன. 

Next Story