அம்பேத்கர் பதாகைகளை கிழித்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அம்பேத்கர் பதாகைகளை கிழித்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே அம்பேத்கர் பதாகைகளை கிழித்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் காலனி வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள பொதுமக்கள் கடந்த 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு கடைவீதியில் பதாகைகளை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கங்கைகொண்ட சோழபுரம் கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளை, மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வடக்கு தெருவை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மர்ம நபர்களை கைது செய்ய கோரி கடை வீதி முன்பு ஜெயங்கொண்டம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், திவாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கிழிந்த பதாகைகளை எடுத்து கொண்டு ஊர்வலமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டிற்கு வந்தனர்.

பின்னர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
1 More update

Next Story