தே.மு.தி.க. பிரமுகர் சாவில் திடீர் திருப்பம்: கிணற்றில் தள்ளி நண்பர்களே கொலை செய்தது அம்பலம்


தே.மு.தி.க. பிரமுகர் சாவில் திடீர் திருப்பம்: கிணற்றில் தள்ளி நண்பர்களே கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 2 May 2018 5:24 AM IST (Updated: 2 May 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தள்ளி நண்பர்களே கொலை செய்த சம்பவத்தில் வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரண்டை,

சேர்ந்தமரம் தே.மு.தி.க. பிரமுகர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர்களே கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே வென்றிலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதிராஜா (வயது 43), தே.மு.தி.க. பிரமுகரான இவர், சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். இவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக இருந்தது. இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த நீதிராஜாவின் நண்பர்களான வக்கீல் சமுத்திரபாண்டி (35), கோடீசுவரன் (30) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நீதிராஜாவுக்கும், சமுத்திரபாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் பகையை வெளிக்காட்டாமல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று நீதிராஜா, சமுத்திரபாண்டி, அவருடைய தம்பி சேர்மசாமி, கோடீசுவரன் ஆகியோர் நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது முன்பகை காரணமாக அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர்கள் நீதிராஜாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சமுத்திரபாண்டி, கோடீசுவரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சேர்மசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story