காதல் திருமணம் செய்தவர்களிடம் விசாரணை; கொலக்கம்பை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


காதல் திருமணம் செய்தவர்களிடம் விசாரணை; கொலக்கம்பை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 May 2018 4:00 AM IST (Updated: 4 May 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாததில் ஈடுபட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

குன்னூர்,

காதல் திருமணம் செய்தவர்களிடம் கொலக் கம்பை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை முசாபுரி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் மணிகண்டன் (வயது 21). இவர் சேலத்தில் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவர் வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் மணிகண்டன் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளைத்தில் உள்ள ஒரு நகைகடையில் வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் படித்த கல்லூரியில் சேலம் ஏட்டாவூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மகள் ராஜலட்சுமி (20) பி.ஏ. படித்து வருகிறார்.

கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கத்தால் மணிகண்டனும், ராஜலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இதற்கிடையே இந்த காதல் விவகாரம் ராஜலட்சுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் ராஜலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து ராஜலட்சுமி, மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கொலக்கம்பை முசாபுரியில் உள்ள மணிகண்டன் வீட்டுக்கு வந்தனர்.

இதற்கிடையே ராஜலட்சுமியின் தந்தை முருகேஷ் மற்றும் அவரது உறவினர்களுடன், மணிகண்டன், ராஜலட்சுமி ஜோடியை காரில் கொலக்கம்பைக்கு அழைத்து வந்த டிரைவர் மாணிக்கம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சேலம் போலீசாருடன், கொலக் கம்பை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணிகண்டனையும், ராஜலட்சுமியையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணிகண்டனுக்கு ஆதரவாக முசாபுரி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ராஜலட்சுமியின் பெற்றோரை அழைத்து வந்தது மாணிக்கம்தான் என்று நினைத்து அவரிடம் உறவினர்கள் தகராறு செய்தனர். தகராறு முற்றவே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு அசம்பாவிதம் நடைபெற்றுவிடாமல் இருக்க போலீசார் மாணிக்கத்தை அழைத்து கொண்டு காரில் சேலம் சென்றனர். போலீசாரிடம் கிராமமக்கள் கூறும்போது, ராஜலட்சுமி எங்கள் (கிராம மக்கள்) முன்பாக பெற்றோருடன் செல்வதாக கூறினால் பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும். மணிகண்டனுடன் வாழ சம்மதம் தெரிவித்தால் அவருடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று கூறினர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜலட்சுமி, தனது கணவர் மணிகண்டனுடன் செல்வதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.


Next Story