கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி கழுதைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம்


கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி கழுதைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 11:00 PM GMT (Updated: 3 May 2018 9:19 PM GMT)

கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி கழுதைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

அரியலூர்,

தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலும் நடந்தது. இந்த நிலையில் ஒரு சில கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. எனவே தேர்தல் நடைபெறாத கூட்டுறவு சங்கங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தக்கோரி அரியலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கழுதைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று காலை நகர தி.மு.க. அலுவலகத்தில் கூடினர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அரியலூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஏற்கனவே அங்கு தயாராக கொண்டு வரப்பட்டு இருந்த 2 கழுதைகளிடம் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் தனபால், ஒன்றிய செயலாளர் கென்னடி மற்றும் ஜோதிவேல், ராஜன், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story