கடந்த 5 மாதங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 508 பேர் கைது


கடந்த 5 மாதங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 508 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2018 3:48 AM IST (Updated: 5 May 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக காணப்பட்ட பாலாறு தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எனவே, பாலாற்றில் காணப்படும் மணல் மாட்டு வண்டிகள், லாரி, ஆட்டோ போன்றவற்றின் மூலம் கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பாலாற்றில் இருந்து மணல் அள்ளுவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. எனவே, மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் போலீசார், வருவாய்த்துறையினர், மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

அப்போது மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை 5 மாதங்களில் மணல் கடத்தியது தொடர்பாக 689 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 118 டிராக்டர்கள், 66 லாரிகள், 79 டிப்பர் லாரிகள், 403 மாட்டு வண்டிகள், 22 பொக்லைன் எந்திரங்கள், 53 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தலில் ஈடுபட்ட 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் கடத்தலை தடுக்க போலீசார் இரவு வேளையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story