ரெயில்-பஸ்கள் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற குமரி, நெல்லை மாணவர்கள்


ரெயில்-பஸ்கள் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற குமரி, நெல்லை மாணவர்கள்
x
தினத்தந்தி 4 May 2018 11:50 PM GMT (Updated: 4 May 2018 11:50 PM GMT)

‘நீட்‘ தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் ரெயில், பஸ்கள் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நாகர்கோவில்,

‘நீட்‘ தேர்வு எழுதுவதற்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் ரெயில், பஸ்கள் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவ-மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் சேருவதற்கு மத்திய அரசு சார்பில் ‘நீட்‘ தேர்வு எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘நீட்‘ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழக மாணவர்களில் சிலருக்கு கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பான வழக்கில் பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததற்கு ஐகோர்ட்டு முதலில் தடை விதித்தது. ஆனால் இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு பிற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து இருப்பதை மாற்ற முடியாது, அந்த மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளிலும், ஒருசில மாணவர்களுக்கு வேறு மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதே போல் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி குமரி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 66 மாணவ-மாணவிகளுக்கு கேரளாவில் பல்வேறு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 12-ம் வகுப்பு படித்த ஏராளமான மாணவர்களுக்கு கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே அந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக நேற்றே தயாராகினர்.

அவர்கள் நேற்று பெற்றோருடன் கேரளா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். விரைவு ரெயில்கள் மற்றும் விரைவு பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் உடனடியாக நிரம்பி விட்டன.

இதையடுத்து திருச்சியில் இருந்து கோவில்பட்டி, நெல்லை வழியாக திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதற்கு முடிவு செய்தனர். அவர்கள் நேற்று காலை திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்ட இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதும் சக மாணவர்களுடன் நேற்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் இந்த ரெயிலில் ஒட்டுமொத்தமாக ஏறி பயணம் செய்தனர்.

இதே ரெயிலில் நெல்லை மற்றும் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளும் பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று மதியம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்ற ரெயில், பஸ்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் குமரி மாவட்ட மாணவ-மாணவிகள் தேர்வு மையம் அமைந்துள்ள ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தற்போது திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்றுள்ள மாணவ-மாணவிகள் அந்தந்த பகுதிக்கு சென்ற உடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள தேர்வு மையங்களை நேரில் சென்று பார்க்க உள்ளனர். பின்னர் அந்த மையம் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். நாளை தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய நேரத்துக்கு முன்னதாக விடுதியில் இருந்து புறப்பட்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

இதுதவிர ஒருசில மாணவர்கள் தங்களது சொந்த கார் அல்லது வாடகை கார்களில் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு செல்கின்றனர். ஒருசிலர் நேற்றே காரில் புறப்பட்டு சென்று விட்டனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதால் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் இது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த மாணவி மதுமிதா கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வு முடித்து ‘நீட்‘ தேர்வு எழுவதற்கு விண்ணப்பித்து இருந்தோம். குறிப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து உள்ளனர். எங்களுக்கு இது மிகவும் சிரமமாக உள்ளது. பொருட்செலவு, கால விரயம் மற்றும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் மார்க் கூறுகையில், “ எங்களுக்கு நீட் தேர்வு மையம் கேரளாவில் அமைக்கப்பட்டு இருப்பது தமிழக மாணவர்களை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்படுத்தும் இடையூறாகவே கருதுகிறோம். எங்களுக்கு கேரளாவில் அமைந்திருக்கும் தேர்வு மையத்துக்கான இடம் சரியாக தெரியாது, அங்கு மலையாள மொழி பேசும் மக்களிடம் சரியாக விசாரித்து இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, முன்னதாகவே கேரளாவுக்கு புறப்பட்டு செல்கிறோம். அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story