ஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஏரியூர்,

பென்னாகரத்தில் இருந்து ஏரியூர் வழியாக நாகமரை வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பென்னாகரம் முதல் மூங்கில்மடுவு வரையில் சாலை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மூங்கில் மடுவு முதல் ஏரியூர் வரையிலான பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் ஏரியூரில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய தார்சாலையை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏரியூரில் சாலை அகலப்படுத்தாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகுந்த இடையூறாக உள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.

இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய்கள் அமைத்த பிறகே தார் சாலை அமைக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் அலுவலர்கள் வந்து ஆக்கிரமிப்பு இடங்களை அளந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பு இடங்களை முறையாக அளந்து தார் சாலை அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் கற்களை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது முறையாக அளந்து சாலை அமைக்கவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
1 More update

Next Story