‘நீட்’ தேர்வு எழுத சிறப்பு பஸ்களில் கேரளா சென்ற மாணவ- மாணவிகள் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழியனுப்பி வைத்தனர்


‘நீட்’ தேர்வு எழுத சிறப்பு பஸ்களில் கேரளா சென்ற மாணவ- மாணவிகள் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழியனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 6 May 2018 4:00 AM IST (Updated: 6 May 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு எழுத சிறப்பு பஸ்களில் கேரளா சென்ற மாணவ- மாணவிகளை நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி, இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

நெல்லை,

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான “நீட்” எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பொதுவாக இதுபோன்ற நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடும் தேர்வு மையம் ஒதுக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமானவர்களுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

எனவே கேரள மாநிலத்துக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ- மாணவிகளுக்காக இலவசமாக சிறப்பு பஸ்கள் இயக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்த இலவச பஸ் சேவை, நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை தொடங்கியது.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டு, ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ- மாணவிகளை வழியனுப்பி வைத்தனர். முன்னதாக மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்தனர்.

நாடு முழுவதும் நாளை (அதாவது இன்று) நீட் நடக்கிறது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆங்கிலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா சி.பி.எஸ்.இ. பள்ளி, வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி சி.பி.எஸ்.இ. பள்ளி, அந்தோணி பப்ளிக் பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் ஜெயேந்திரா சரசுவதி பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 380 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

வெளி மாநிலங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகளை முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் இருந்து ‘நீட்‘ தேர்வு எழுத எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களில் தண்ணீர், தடையின்றி மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

பிற மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்ல நெல்லை புதிய பஸ்நிலையத்தில் சிறப்பு வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வினை நல்ல முறையில் எழுத வாழ்த்துகிறேன்.

தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் மாணவர்களுடன் பெற்றோரும் புறப்பட்டு சென்றனர். மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோனி, வணிக மேலாளர் சுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் சங்கரநாராயணன், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story