அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரமாரி வெட்டிக் கொலை


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரமாரி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 6 May 2018 4:11 AM IST (Updated: 6 May 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு,

வேலூரை அடுத்த அணைக்கட்டு அருகே உள்ள தேவிசெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55), அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். தற்போது அரசு கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (50), தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவரும் அரசு கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். அரசு கட்டிடங்களுக்கு டெண்டர் எடுப்பது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டியும், முன்விரோதமும் இருந்து வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவிசெட்டிகுப்பத்தை அடுத்த மகமதுபுரம் அருகே சமுதாய கூடம் கட்டுவதற்கான இடத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மணிமாறன் வழங்கி உள்ளார். இதனையடுத்து அங்கு சமுதாய கூடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மகேந்திரன் தனது கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் அரசு கட்டிட ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக மணிமாறனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மணிமாறனை, மகேந்திரன் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறனின் ஆதரவாளர்கள், மகேந்திரனை வீடு புகுந்து தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, வேப்பங்குப்பம் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக கணினிப்பிரிவில் இருந்து மகேந்திரனுக்கு செல்போன் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதில் பேசிய நபர், “ஏற்கனவே நீங்கள் செய்த அரசு ஒப்பந்த பணிக்கு காசோலை வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறி உள்ளார். இதையடுத்து மகேந்திரன் தனது மகன் தசரதனுடன் காரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காலை 10.30 மணியளவில் வந்தார்.

பின்னர் மகன் தசரதனை காரிலேயே இருக்க வைத்துவிட்டு மகேந்திரன் மட்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள கணினி பிரிவிற்கு சென்றார். அப்போது அங்கு மணிமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மகேந்திரன் வந்ததை பார்த்த இவர்கள் அவரை கழுத்து, வயிறு, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதனால் மகேந்திரன் அய்யோ, அம்மா என அலறியவாறு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிலையில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

தந்தையின் அலறல் சத்தம் கேட்டு காரில் இருந்த அவரது மகன் தசரதன் வேகமாக 2-வது மாடிக்கு ஓடி வந்தார். இறந்த தந்தையின் உடலைபார்த்து கதறினார். அப்போது மகேந்திரனை வெட்டிய 5 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பாண்டு ஆகியோர் கொலை நடந்த அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மகேந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தொழில் போட்டியில் மணிமாறன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மகேந்திரனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் காரில் தப்பி சென்றது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம், சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகேந்திரன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூட்டப்பட்டது.

மகேந்திரன் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் ஆலங்காயம் கூட்ரோடு பகுதியில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வந்த காரை ஆலங்காயம் போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த மணிமாறன், கார்த்தி, கோபி, அசோகன் (45), ராமமூர்த்தி (54) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகேந்திரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஜெயசுதா என்ற மகளும், தசரதன், மணிகண்டன் என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜெயசுதாவும் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலராவார்.

தொழில் போட்டியால் அ.தி.மு.க. பிரமுகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அணைக்கட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story