வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 11 பவுன் நகை, பணம் கொள்ளை போலீசார் விசாரணை


வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 11 பவுன் நகை, பணம் கொள்ளை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2018 3:45 AM IST (Updated: 8 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சிவதாபுரத்தில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 11 பவுன் நகை, 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் சிவதாபுரம் முருங்கப்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). விவசாயி. இவரது மனைவி அலமேலு (70). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். பின்னர், யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக ஒருவன், தனது முகத்தை துணியால் மூடியும், மற்றொருவன் தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் ஒரு மறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு யாருக்கும் சத்தம் கேட்காதவாறு வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த அலமேலு, முகமூடி திருடர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர்கள் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர், வீட்டிற்குள் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த தனது கணவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மகன் சுப்பிரமணியனுக்கும் அலமேலு தகவல் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் அருகே நள்ளிரவில் மூதாட்டியை மிரட்டி நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story