மணப்பள்ளி அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


மணப்பள்ளி அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2018 10:35 AM IST (Updated: 11 May 2018 10:35 AM IST)
t-max-icont-min-icon

மணப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணப்பள்ளி ஊராட்சி குன்னிப்பாளையம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் காவிரி ஆற்றில் நுழைவுப் பகுதியில் அலுவலகம் அமைக்க ஆயத்தப் பணி நேற்று காலை நடைபெற்று கொண்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, மணல் லாரிகள் செல்ல சாலை செப்பனிடும் பணிக்காக பொக்லைன் எந்திரம் ஆற்றுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த ஊர் பொதுமக்கள், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலளர் பொன்.ரமேஷ் தலைமையில் காவிரி ஆற்றுக்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு பணியை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியதாவது:-

இன்றைய சூழ்நிலையில் காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதில் மணல் அள்ளினால் இன்னும் காய்ந்து குடிநீர் கூட கிடைக்காது. இங்கிருந்து 10 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று கொண்டு உள்ளது. எனவே இங்கு மணல் அள்ளினால் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் குவாரி செயல்படக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து இன்னும் 2 நாட்களுக்கு அலுவலக ஆயத்த பணி செய்வதில்லை என்றும், ஆற்றில் நடைபெறும் பணியை பொதுமக்கள் தடுக்க கூடாது என அதிகாரிகள் சமரசம் பேசினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story