பேராசிரியர் கொலை வழக்கில் விசாரணை முடிந்தது: ராக்கெட் ராஜா மீண்டும் கோவை சிறையில் அடைப்பு


பேராசிரியர் கொலை வழக்கில் விசாரணை முடிந்தது: ராக்கெட் ராஜா மீண்டும் கோவை சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 15 May 2018 9:30 PM GMT (Updated: 15 May 2018 3:37 PM GMT)

பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவிடம் விசாரணை முடிவடைந்து நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நெல்லை, 

பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவிடம் விசாரணை முடிவடைந்து நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பேராசிரியர் கொலை

நெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). நெல்லையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த இவர் தனது மாமனார் கொடியன்குளம் குமார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி காலை செந்தில்குமாரை ஒரு கும்பல் வீடு புகுந்து வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நிலத்தகராறு காரணமாக கொடியன்குளம் குமாரை கொலை செய்ய வந்த கும்பல் செந்தில்குமாரை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தேடப்பட்ட நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகி ராக்கெட் ராஜா கடந்த 6–ந் தேதி இரவு சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை பாதுகாப்பு கருதி கோவை மத்திய சிறைக்கு மாற்றினர்.

போலீஸ் காவலில் விசாரணை

இந்த நிலையில் பேராசிரியர் கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ராக்கெட் ராஜாவை கோவை சிறையில் இருந்து நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். பின்னர் நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் அமர்வு (தீண்டாமை) கோர்ட்டில் நீதிபதி சந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பேராசிரியர் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் விஜயகுமார், ராக்கெட் ராஜாவிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா, 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி ராக்கெட் ராஜாவை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

முன்கூட்டியே கோர்ட்டில் ஆஜர்

அதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ராக்கெட் ராஜாவை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் போலீசார் ஒரு நாள் முன்னதாகவே விசாரணையை முடித்து ராக்கெட் ராஜாவிடம் வாக்குமூலம் வாங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் நேற்று மதியமே ராக்கெட் ராஜாவை நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ராக்கெட் ராஜாவிடம் விசாரணை முடிந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சந்திரா இந்த வழக்கு விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு தள்ளிவைத்தும், ராக்கெட் ராஜா காவலை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

கோவை சிறையில் அடைப்பு

இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராக்கெட் ராஜாவை போலீஸ் வேனில் கோவைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் அவர் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக நெல்லை கோர்ட்டு வளாகத்தில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்கள் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story