சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்; வருவாய் ஆய்வாளர் கைது
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை–திண்டுக்கல் பை–பாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமனை அணுகினார். அவர் சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து முருகேசன் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை ரகுராமனிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி முருகேசன் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வருவாய் ஆய்வாளர் ரகுராமனிடம் அந்த பணத்தை கொடுத்தார்.
அப்போது ரகுராமன் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை லஞ்ச பணத்துடன் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.