அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்கச்சென்ற போலீஸ்காரர்களை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சி டிரைவர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்கச்சென்ற போலீஸ்காரர்களை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் புதுமடம் கடற்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக உச்சிப்புளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் நவநீதகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்த உச்சிப்புளியை சேர்ந்த டிரைவர் மாரிக்குமார் என்ற விஜய் (28) என்பவரை போலீசார் பிடிக்க முடியன்றனர்.
இதையடுத்து அவர், போலீஸ்காரர்கள் மீது டிராக்டரை ஏற்றி கொலைசெய்ய முயன்று தப்பிச்சென்றுவிட்டார். அப்போது போலீசார் சுதாரித்து விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கைதுஇதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் டிரைவர் மாரிக்குமாரை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.