படகு சவாரி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அதிகாரியை தாக்கிய பொதுமக்கள்
அஞ்சுருளி பகுதியில் படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டப்பனை,
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அஞ்சுருளி பகுதியில் கடந்த 17–ந்தேதி சுற்றுலா விழா தொடங்கியது. இது வருகிற 31–ந் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக அங்குள்ள ஏரியில் படகு சவாரி விடப்பட்டது. இதில் பலர் உற்சாகமாக சென்று மகிழ்ந்தனர். இதனிடையே வனத்துறையினர் படகு சவாரிக்கு திடீர் தடை விதித்தனர். இதனால் படகு சவாரிக்கு டிக்கெட் எடுத்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் வன உயிரின பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே, படகு சவாரி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்இந்தநிலையில் படகு சவாரி நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சியார் பஞ்சாயத்து தலைவர் மாத்யூ ஜார்ஜ் தலைமையில் பொதுமக்கள், ஏரி தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் வனத்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டக்காரர்கள், காஞ்சியார் வள்ளிகவளா பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் அங்கிருந்த வனத்துறை அதிகாரி சந்தோஷ் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் அவரை தாக்கி அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர். கற்களை தூக்கி வீசி ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கட்டப்பனை போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் படகு சவாரிக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டம் நடக்கும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.