மானூர் அருகே கோவில் விழாவில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி; அதிர்ச்சியில் தாய் சாவு 2 பேர் கைது


மானூர் அருகே கோவில் விழாவில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி; அதிர்ச்சியில் தாய் சாவு 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2018 8:30 PM GMT (Updated: 23 May 2018 8:21 PM GMT)

மானூர் அருகே கோவில் விழாவில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

மானூர், 

மானூர் அருகே கோவில் விழாவில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

தொழிலாளி

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாவடியைச் சேர்ந்தவர் பிச்சைகண்ணு. இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர்களுடைய மகன் ராமர் பாண்டி (27). இவர் மும்பையில் இட்லி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிச்சைகண்ணு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராமர் பாண்டி தனது சொந்த ஊரில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளபாண்டி மகன் செல்வகுமார் (23). லாரி டிரைவர். இவர் கடந்த வாரம் அப்பகுதி வழியாக லாரியை ஓட்டிச் சென்றபோது, ராமர் பாண்டி வீட்டின் முன்பாக நின்ற மின் கம்பத்தில் மோதியது. இதுதொடர்பாக செல்வகுமாருக்கு மின்வாரியத்தினர் அபராதம் விதித்தனர். இதற்கிடையே மின்கம்பத்தில் லாரி மோதியது குறித்து மின்வாரியத்துக்கு ராமர்பாண்டி தகவல் தெரிவித்ததாக செல்வகுமார் கருதினார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

கல்லால் தாக்கி...

நேற்று முன்தினம் இரவில் மாவடியில் கோவில் கொடை விழா நடந்தது. அப்போது ராமர் பாண்டியை செல்வகுமார் அவதூறாக பேசினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர், ராமர்பாண்டியை கீழே தள்ளி விட்டார். அப்போது செல்வகுமாரின் நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மகேஷ் (20), கார்த்திக் ஆகிய 2 பேரும் சேர்ந்து அவரை பிடித்து கொண்டனர். செல்வகுமார் கல்லால் அவருடைய தலையில் தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமர்பாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே செல்வகுமார், மகேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அதிர்ச்சியில் தாய் சாவு

இதனை அறிந்த ராமர்பாண்டியின் தாயார் சண்முகத்தாய் அலறியவாறு அங்கு ஓடி வந்தார். தன்னுடைய மகன் ரத்த வெள்ளத்தில் மயங்கியதைப் பார்த்த சண்முகத்தாயும் மயங்கி விழுந்தார். உடனே ராமர்பாண்டி, சண்முகத்தாய் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சண்முகத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராமர் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார், மகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர். ராமர்பாண்டி தன்னுடைய பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் ஆவார். இவருடன் பிறந்த லட்சுமணன், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் ஒரே மகனும் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததால், அதிர்ச்சியில் தாய் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story