பழனி முருகன் சிலை மோசடி வழக்கு: கோவில் முன்னாள் கண்காணிப்பாளர் உள்பட 5 பேரிடம் தீவிர விசாரணை
பழனி முருகன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக கோவில் முன்னாள் கண்காணிப்பாளர் உள்பட 5 பேரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இதுதொடர்பாக சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
பின்னர் இந்த 2 பேருக்கும் ஆதரவாக இருந்ததாக பழனி கோவில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே முன்னாள் ஆணையர் தனபாலுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக பழனியில் முகாமிட்டுள்ளனர்.
தொடர்ந்து பழனி கோவில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று, கோவில் முன்னாள் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், முன்னாள் பேஸ்கார் (பூஜை முறை மேற்பார்வையாளர்) சீனிவாசன், முன்னாள் ஓதுவார் சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தற்போதைய ஓதுவார்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ஐம்பொன் சிலைக்கு ஓதுவார்கள் பாடல்கள் பாடியபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? அந்த சூழ்நிலையை கண்காணிப்பாளர்கள் எப்படி கையாண்டனர்? சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்ததா? அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.