காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:04 AM IST (Updated: 3 Jun 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் பலம் 122-ல் இருந்து 78 ஆக குறைந்தது. அதாவது அக்கட்சி 44 இடங்களை பா.ஜனதாவிடம் பறிகொடுத்தது. ஆயினும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் பரமேஸ்வர் விவரங்களை கேட்டு அறிந்தார். இந்த கூட்டத்திற்குப் பின் பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்விக்கான காரணங்களை கேட்டு அறிந்தேன். நாங்கள் ஆட்சியை இழந்துவிட்டோம். இருந்தாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். தேர்தலில் நேர்மையாக செயல்பட்டு கட்சிக்காக உழைத்தவர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு கூறி இருக்கிறேன்.

அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினேன். வாரிய தலைவர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதனால் அந்த கட்சி தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து செல்லுமாறு அறிவுரை கூறினேன்.

முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி 5 ஆண்டுகள் இருப்பார் என்று எங்கள் கட்சி மேலிடம் கூறி இருக்கிறது. அதை நாங்கள் ஏற்க வேண்டிய நிலையில் உள்ளோம். 2 முறைக்கு மேல் மந்திரியாக இருந்தவர்களுக்கு இந்த முறை மந்திரி பதவி வழங்க வேண்டாம் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அதுபற்றி பரிசீலித்து முடிவு செய்வோம். இதை கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இதில் இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

Next Story