போலி இறப்பு சான்றிதழ் பெற்று நிலத்தை அபகரித்ததாக மகன் மீது மூதாட்டி புகார்
உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் பெற்று நிலத்தை அபகரித்து விற்று விட்டதாக, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகன் மீது மூதாட்டி புகார் அளித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துரை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ஆச்சிமுத்து மனைவி மருதாயம்மாள் (வயது 80). ஆச்சிமுத்து கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருதாயம்மாள் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
நான் கூலிவேலை செய்து வருகிறேன். எனக்கு வெள்ளைச்சாமி என்ற மகனும், ஆச்சியம்மாள், சின்னம்மாள் ஆகிய மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை அவருடைய சொத்துக்களை என்னுடைய பெயரில் எழுதி வைத்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பெயரில் உள்ள சொத்தை விற்க முயன்றேன். அப்போது சொத்துகள் அனைத்தும் வேறு ஒருவருடைய பெயரில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, நான் இறந்துவிட்டதாக கூறி கடந்த 2014–ம் ஆண்டு என்னுடைய மகனே போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று எனது நிலத்தை அபகரித்துள்ளார். அதனை அவருடைய மகன் ஜெகநாதன் பெயருக்கு மாற்றிவிட்டு, பின்னர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து மகனிடம் கேட்டபோது என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை நடத்தாமல் அலைக்கழிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்து விற்ற மகன் மற்றும் பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.