கர்நாடகத்தில் ‘காலா’ படம் திரையிட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கர்நாடகத்தில் ‘காலா’ படம் திரையிட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2018 3:15 AM IST (Updated: 6 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

‘‘கர்நாடகத்தில் ‘காலா‘ படம் திரையிடுவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று மாநில அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு,

‘‘கர்நாடகத்தில் ‘காலா‘ படம் திரையிடுவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று மாநில அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டில் மனு

நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘காலா‘ படம் நாளை(வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதற்கு கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் நடித்துள்ள ‘காலா‘ படத்தை கர்நாடகத்தில் தடை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து காலா படத்தை கர்நாடகத்தில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் கர்நாடகத்தில் ‘காலா‘ படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் ‘காலா‘ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார்‘ சார்பில் அதன் உரிமையாளர்கள் நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி நரேந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சிந்தன் சின்னப்பா வாதிடுகையில், “அரசியல் சாசனப்படி, அதாவது 1952–ம் ஆண்டு திரைப்பட சட்டப்படி சி.பி.எப்.சி. சான்றிதழ் பெற்ற பிறகு மனுதாரர்கள் தங்களின் திரைப்படத்தை வெளியிட உரிமை உள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை அடுத்து, பல்வேறு கன்னட அமைப்புகள் முதல்–மந்திரியை சந்தித்து ‘காலா‘ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு கொடுத்தன. மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்தை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்து உள்ளது. அதனால் காலா படத்தை வெளியிடவும், அந்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து கூடுதல் அரசு வக்கீல் சிவண்ணா வாதிடும்போது, “கர்நாடகத்தில் ‘காலா‘ படத்தை வெளியிட எந்த அமைப்பும் தடை விதிக்கவில்லை. மேலும் அந்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை மனுதாரர்கள் கொடுக்க வேண்டும்“ என்றார்.

கட்டுப்படுத்த முடியாது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநில அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், “பேச்சு சுதந்திரம், கருத்தை வெளியிடுதல் குறிப்பாக திரைப்படங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்த முடியாது. பத்மாவத் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைகளை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிக்கிறேன். அதே நேரத்தில் இந்த படத்தை கட்டாயம் திரையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

வெளியிடாமல் இருப்பதே நல்லது

இந்த நிலையில் முதல்–மந்திரி குமாரசாமியை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்த் நேற்று சந்தித்து பேசினார். அப்போது எக்காரணம் கொண்டும் காலா படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக குமாரசாமி உறுதியளித்தார். இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடகத்தில் ‘காலா’ படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சூழ்நிலையில் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருப்பதே நல்லது’’ என்றார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக வர்த்தகசபை புதிய நிபந்தனை

கர்நாடக திரைப்பட வர்த்தகசபை நடிகர் ரஜினிகாந்துக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்த் கூறுகையில், ‘‘காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் கூற வேண்டும். இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பேசி இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூற வேண்டும். அவ்வாறு ரஜினிகாந்த் கூறினால் நாங்கள் ‘காலா’ படத்தை வெளியிட தயார். இல்லாவிட்டால் அந்த படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.


Next Story