போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜியின் தம்பியை பிடித்து போலீசார் விசாரணை


போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜியின் தம்பியை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Jun 2018 11:30 PM GMT (Updated: 8 Jun 2018 8:33 PM GMT)

போலி ஏ.டி.எம். மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்துருஜியின் தம்பியை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்வதாக போலீசுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் துப்பு துலங்கியது. புதுவையை சேர்ந்த ஒரு கும்பல் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அதன் மூலம் பலரது வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.

இந்த மோசடி தொடர்பாக லாஸ்பேட்டை லட்சுமிநகர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), முதலியார்பேட்டை விவேக் உள்பட 5 பேரை ஏற்கனவே சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இந்த மோசடியில் உடந்தையாக இருந்த வியாபாரிகள் ரெட்டியார்பாளையம் சிவக்குமார், லாஸ்பேட்டை டேனியல் சுந்தர் சிங் (33) மற்றும் குரும்பாபேட் கணேசன்(33), சோலைநகர் அப்துல் சம்பத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுவைப் எந்திரங்கள், ரொக்க பணம், போலி ஏ.டி.எம். கார்டுகள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா(36) என்பவரை நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னிடம் இருந்த 5 சுவைப் எந்திரத்தை சிவக்குமார் என்பவர் மூலம் சந்துருஜியிடம் கொடுத்து இதற்காக கமி‌ஷன் தொகையாக ரூ.3¼ லட்சம் பெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்கள், காசோலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவரையும் சேர்த்து இந்த மோசடி யில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது போலீஸ் பிடியில் அவரது தம்பி மணிசந்தர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. சந்துருஜி இருப்பிடம் குறித்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பர்ன்வால் நிருபர்களிடம் கூறியதாவது:–

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி செய்த வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெல்ஜியம், அயர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச கும்பலுடன், ஏ.டி.எம். மோசடி கும்பலுக்கு தொடர்பு இருப்பது பற்றிய திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துருஜி விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.டி.எம். கார்டு மோசடி விவகாரத்தில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு அடுத்தடுத்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்து வருவதை அறிந்து என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான சத்யா இனி தப்ப முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ஏற்கனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கோர்ட்டுகளில் வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்ற முடிவுக்கு வந்தார். இந்தநிலையில் போலீசில் சிக்காமல் இருக்க தன்னுடைய சுவைப் எந்திரங்களை சந்துருஜியிடம் இருந்து திரும்பப் பெற்று அதனை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் வீசி இருப்பது தற்போது கைதான நிலையில் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சுண்ணாம்பாற்றில் சுவைப் எந்திரங்களை வீசியதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார். ஆனால் அந்த எந்திரங்கள் எதுவும் சிக்கவில்லை.

முக்கிய குற்றவாளியான சந்துருஜியின் தம்பி மணிசந்தரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். அவரது வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்துருஜி தனது தம்பியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சி.ஐ.டி. போலீசாரிடம் செல்போனை கொடுக்குமாறு தனது தம்பியிடம் தெரிவித்துள்ளார். போலீசார் அந்த செல்போனை வாங்கி பேசியபோது, ‘எனது தம்பியை பிடித்து விட்டீர்கள். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். ஒரு வேளை நான் இருக்கும் இடத்தை நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கோர்ட்டில் சரணடைவேனே தவிர உங்களிடம் கைதாக மாட்டேன்’ என்று சவால் விடுத்துள்ளார். இது சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story