போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் மோசடி: முக்கிய குற்றவாளியான சந்துருஜியின் தம்பி கைது


போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் மோசடி: முக்கிய குற்றவாளியான சந்துருஜியின் தம்பி கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 11:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:22 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியின் தம்பி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி போலியாக ஏ.டி.எம். கார்டு மூலம் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து வருவதாக போலீசில் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவின் பேரில் சி.ஐ.டி. போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.

இதில் துப்பு துலங்கியது. முதலியார்பேட்டையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக லாஸ்பேட்டை லட்சுமிநகரைச் சேர்ந்த என்ஜினீயர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), முதலியார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 5 பேரை ஏற்கனவே சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த வியாபாரிகளான ரெட்டியார்பாளையம் சிவக்குமார், லாஸ்பேட்டை டேனியல் சுந்தர் சிங் (33) மற்றும் குரும்பாபேட் கணேசன்(33), சோலைநகர் அப்துல் சம்பத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பலரது வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக எடுத்து இருப்பதும், சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இந்த மோசடியில் தொடர்புடைய புதுவை அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை போலீசார் தேடி வந்தநிலையில் அவர்கள் தலைமறைவானார்கள். இவர்களில் தற்போது சத்யா கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வரும் சந்துருஜி குறித்தும், மோசடி செய்தது பற்றியும் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சந்துருஜியின் தம்பி மணிசந்தர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கும் போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரும் சந்துருஜியுடன் சேர்ந்து போலி ஏ.டி.எம். கார்டு மூலம் சுவைப்பிங் எந்திரங்கள் மூலம் பல லட்சம் எடுத்துள்ளார். அந்த பணத்தைக் கொண்டு சொத்துகளை வாங்கி குவித்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணிசந்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கார், 2 சுவைப்பிங் எந்திரங்கள், 2 ஏ.டி.எம். கார்டுகள், வங்கி காசோலை புத்தகம், பான்கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

சந்துருஜியின் தம்பி கைதாகியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக சந்துருஜியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் முன்ஜாமீன் பெற சந்துருஜி முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அது கிடைக்காத நிலையில் கோர்ட்டில் சரணடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்பாகவே அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கில் சந்துருஜி முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவரை கைது செய்ததால்தான் வேறு யார் யாருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளது? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

Next Story