பெங்களூருவில் பயங்கரம் நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை ஒருவர் கைது; 4 பேரை போலீஸ் தேடுகிறது


பெங்களூருவில் பயங்கரம் நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை ஒருவர் கைது; 4 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 11 Jun 2018 2:45 AM IST (Updated: 11 Jun 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ரவுடி வெட்டிக் கொலை

பெங்களூரு சுப்பிரமணியபுரா அருகே வசித்து வந்தவர் ஜெயந்த்(வயது 35). இவரது பெயர் கோனனேகுன்டே போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஜெயந்த் மீது ஒரு கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயந்த் மதுஅருந்தினார். பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். கோனனகுன்டே கிராஸ் அருகே தனது நண்பர்களுடன் அவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு காரில் வந்த 5 மர்மநபர்கள் ஜெயந்தை வழிமறித்தார்கள். பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் நடுரோட்டில் வைத்து ஜெயந்தை சரமாரியாக வெட்டினார்கள். இதைப்பார்த்த ஜெயந்தின் நண்பர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். அவ்வாறு தப்பி சென்றவர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், மர்மநபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த ஜெயந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக செத்தார்.

ஒருவர் கைது

இதற்கிடையில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சுப்பிரமணியபுரா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் ஒருவரால் மட்டும் காரில் ஏற முடியாமல் போனது. உடனே அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்ற போலீசார் சிறிது தூரத்தில் மடக்கிப்பிடித்து கைது செய்தார்கள். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சுப்பிரமணியபுரா போலீசார் மற்றும் துணை போலீஸ் கமி‌ஷனர் சரணப்பா சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஜெயந்த் ரவுடி என்பதால் முன்விரோதத்தில் எதிர் கோஷ்டியை சேர்ந்த கும்பல், அவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கைதான நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பவன் என்று தெரிந்தது. அவரிடம் தலைமறைவான மற்ற 4 பேர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடிவருகிறார்கள்.


Next Story