திருமணம் செய்து வைப்பதாக 4 பேரிடம் டி.வி. நடிகை–அழகான பெண்களின் புகைப்படங்களை காட்டி மோசடி
திருமணம் செய்து வைப்பதாக டி.வி. நடிகை–அழகான பெண்களின் புகைப்படங்களை காட்டி 4 பேரிடம் மோசடி செய்த கணவன்–மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
திருமணம் செய்து வைப்பதாக டி.வி. நடிகை–அழகான பெண்களின் புகைப்படங்களை காட்டி 4 பேரிடம் மோசடி செய்த கணவன்–மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பி.எஸ்.என்.எல். அதிகாரிநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதள திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்து உள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த நாகர்கோவில் அஞ்சுகிராமம் சத்யாநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (36) என்பவர் முருகனை தொடர்பு கொண்டு தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி உள்ளார்.
மேலும் பெண்ணுக்கு தாய்– தந்தை இல்லாததால் மாப்பிள்ளை வீட்டாரே திருமண செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை முருகனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். பெண்ணின் புகைப்படத்தை பார்த்த முருகன் உடனே திருமணத்துக்கு சம்மதித்ததுடன் திருமண செலவுக்காக சுப்பிரமணியன் கேட்ட ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705–ஐ கொடுத்ததாக கூறப்படுகிறது.
மோசடி அம்பலம்பணத்தை வாங்கிய சுப்பிரமணியன், நெல்லை பேட்டையில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்வதாக கூறினார். சில நாட்கள் கழித்தும் திருமணத்துக்கான ஏற்பாட்டை சுப்பிரமணியன் செய்யவில்லை. மேலும் சுப்பிரமணியனின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் முருகன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இந்த மோசடிக்கு சுப்பிரமணியனுக்கு, அவருடைய மனைவி லாவண்யா (32), கொழுந்தியாள் மாயா (22) ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைதுஇதுகுறித்து முருகன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், இதுகுறித்து விசாரிக்க நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கியமேரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கியமேரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்கேயன், சாந்தி, சாவித்திரி, துரைச்சாமி, கதிரேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
டி.வி. நடிகைகள்விசாரணையில் அவர்கள் முருகனை ஏமாற்றியது போல் சென்னை அடையாறை சேர்ந்த ராஜேந்திரன், அன்பழகன், அமெரிக்காவை சேர்ந்த அரசகுமரன் என்ற ராஜ் ஆகியோரை ஏமாற்றியதும் தெரியவந்தது.
மணமகள் தேவை என்று விளம்பரம் செய்கிறவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டி.வி. நடிகைகள் மற்றும் அழகான பெண்களின் புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காட்டியும், அதன்பிறகு திருமண செலவை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியும், பேச்சுவார்த்தை நடத்தி பணத்தையும், சொத்தையும் வாங்கி விட்டு அவர்களை ஏமாற்றுவிட்டு தங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்‘ செய்து விட்டு வெளியூர் சென்றுவிடுவதும் தெரியவந்தது.
பணம்–நகை பறிமுதல்இதைத்தொடர்ந்து அவர்கள் மோசடி செய்த ரூ.63 லட்சத்து 42 ஆயிரத்து 873 ரொக்கம், 69 பவுன் தங்க நகைகள், பித்தளை முருகன் சிலை, 4 செல்போன்களையும், லாவண்யா பெயரில் உள்ள வீடு மற்றும் நிலத்தின் பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும்.
திருமணம் செய்து வைப்பதாக கூறி நூதன முறையில் மோசடி செய்த கணவன்– மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.