சிவகங்கை உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு–வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைதுசெய்யப்பட்டான்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த கொல்லங்குடி அருகே கடந்த 19.9.2017 அன்று வயலுக்கு சென்ற கண்ணாத்தாள் என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டிமிரட்டி 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுபோல் நேற்று முன்தினம் பாக்கியராஜ் என்பவரிடம் மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டிமிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் இனஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அப்போது இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது, பிரபல ரவுடியும், கொள்ளைகாரனுமான தங்கராஜ் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தங்கராஜ் அவரது சொந்த ஊரான திருப்பாச்சேத்தியை அடுத்த ஆவரங்காடு பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார், ஆவரங்காட்டில் பதுங்கியிருந்த தங்கராஜை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தங்கராஜ், கடந்த 2001–ம் ஆண்டில் இருந்து கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது சென்னை, கோவை, திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 25–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 14.6.2016 அன்று சென்னை திருவான்மியூரில் சரவணன் என்பவரது வீட்டில் 100 பவுன் நகைகள் மற்றம் ரூ.9 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர். இதேபோல் கோவை மாவட்டம் அவினாசியில் 18.2.2016 அன்று ஒரு வீட்டில் புகுந்து 30 பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ளார். மேலும் இவர் சிவகங்கையில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட தங்கராஜிடம் இருந்து 3 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.