2 நாட்களில் தடைகாலம் முடிவடையும் நிலையில் மீன்பிடிக்க செல்ல தயாராகி வரும் விசைப்படகு மீனவர்கள்
தடை காலம் முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15–ந்தேதி முதல் ஜூன் 14–ந்தேதி வரையிலும் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சீசனாக உள்ளதால், இந்த 61 நாட்கள் மட்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மத்திய–மாநில அரசால் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டின் தடை காலமானது கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதியில் இருந்து தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல ஊர்களிலும் சேர்த்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் விசைப் படகுகளுக்கான 61 நாள் மீன்பிடி தடை காலம் நாளை(வியாழக்கிழமை) இரவு 12 மணியுடன் முடிவடைகின்றது. தடை காலம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடந்த 1 வாரத்திற்கு மேலாகவே பழுது பார்ப்பதற்காக கரையில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வலைகளை மீனவர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
தடை காலம் வருகிற நாளை இரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில் 15–ந்தேதி அன்று விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாத விடுமுறை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தடை காலம் நாளை நள்ளிரவில் முடிவடைந்தாலும் ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு 16–ந்தேதி அதிகாலை முதல் மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கவுள்ளதாக மீன்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். 61 நாட்கள் தடை காலம் முடிந்து வருகிற சனிக்கிழமை முதல் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல உள்ளதால் இறால் மீன்கள் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுமே அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் இருந்து வருகின்றனர். தடை காலத்தையொட்டி கடந்த 2 மாதமாக களையிழந்து காணப்பட்ட கடற்கரை பகுதி நேற்று முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிவிட்டது. இலங்கை கடற்படையால் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றும் கடவுளை வேண்டி மீனவர்கள் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.