கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி, கிராம மக்கள் போராட்டம்


கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி, கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். இதனால் உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் தினமும் குடியிருப்புகள் அல்லது விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் காட்டு யானையிடம் பொதுமக்களும் சிக்கி உயிரிழக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே வாச்சிக்கொல்லி அட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்ற சுரேஷ் (வயது 42). நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பாடந்தொரைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார்.

பின்னர் அவரை காண வில்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். தொடர்ந்து காலையில் வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வர வில்லை. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கர்க்கப்பாலியில் இருந்து வாச்சிக்கொல்லிக்கு செல்லும் பாதையில் புதருக்குள் சுரேஷ் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்ற ஆதிவாசி மக்கள்சிலர் பார்த்தனர். மேலும் அப்பகுதியில் காட்டு யானையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தன.

இதனால் காட்டு யானை தாக்கி சுரேஷ் பலியாகி இருந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த கூடலூர் வன அலுவலர் ராகுல், தாசில்தார் ரவி, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த சுரேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் காட்டு யானைகள் அட்டகாசத்தால் சிலர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறினர். இதனால் காட்டு யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்காததால் மனித உயிர்கள் இழந்து வருவதாக ஆவேசமாக தெரிவித்தனர். மேலும் பலியான சுரேசின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்புஏற்பட்டது. அவர்களிடம் வன அலுவலர் ராகுல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதிவாசி பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை.

மின்சார வசதி இல்லாததால் இரவில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்ட வன அலுவலர் ராகுல் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். பின்னர் 2 மணி நேரத்துக்கு பிறகு சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இது குறித்து தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 2–ந் தேதி பாடந்தொரை அருகே வட்டக்கொல்லி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபரை காட்டு யானை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பலர் காயம் அடைந்துள்ளனர். காட்டு யானை தொடர் தாக்குதல்களால் கிராம மக்கள் அச்சமும், பீதியும் அடைந்துள்ளனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் அடர்ந்த வனம், தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனவிலங்குகளும் அதிகளவு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வனம் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இதனால் எந்த நேரத்தில் காட்டு யானைகள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ? என்ற பீதியில் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்கின்றனர். பெண் தொழிலாளர்கள் வீட்டுக்கு விரைவாக சென்று விடும் சூழலில் ஆண் தொழிலாளர்கள் பலர் அரசு மதுபான கடைகளுக்கு சென்று விட்டு காலதாமதமாக வீடு திரும்பும் சமயத்தில் காட்டு யானைகளிடம் சிக்கி உயிரை இழக்கும் சூழ்நிலை கூடலூர் பகுதியில் காணப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் கிராமப்புறங்களுக்கு மாற்றப்பட்டதால் மதுபிரியர்களும் போதைக்கு அடிமையாகி வீடுகளுக்கு இரவு நடந்து செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகிறது. இதனால் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் அல்லது மாலை 6 மணி வரை மட்டுமே மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

Next Story