தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நல்லக்கண்ணு மனு


தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நல்லக்கண்ணு மனு
x
தினத்தந்தி 17 Jun 2018 3:00 AM IST (Updated: 16 Jun 2018 6:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நல்லக்கண்ணு மனு கொடுத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நியாயமற்றது

தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் 22–ந்தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அன்றும், 23–ந்தேதியும் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தினசரி நள்ளிரவு நேரங்களில் போலீசார் வீடுகளில் கதவுகளை தட்டி பெண்களை மிரட்டி ஆண்களை கைது செய்வது நியாயமற்றது ஆகும்.

கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும்

இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும்போது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தூத்துக்குடியில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் போலீசார் மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது.


Next Story