தடைகாலத்துக்கு பிறகு முதல் கடலுக்கு சென்று மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றம்
தடைகாலத்துக்கு பிறகு முதல் கடலுக்கு சென்று மீன் பிடித்து கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் தடை காலம் முடிந்து கடந்த 15–ந்தேதி அன்று மாலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து சுமார் 800 விசைப் படகுகளில் 4000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க முதல் கடலுக்கு சென்றனர்.மீன் பிடித்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன் களுடன் படகுகளில் ராமேசுவரத்திற்கு கரை திரும்பினார்கள்.
61 நாட்களுக்கு பிறகு மீன் பிடித்து வந்த மீனவர்களின் ஒவ்வொரு படகிலும் இறால் மீன்கள் 150–ல் இருந்து 250 கிலோ வரையிலும் கிடைத்து இருந்தது.இதை தவிர நண்டு 30 கிலோ வரையிலும், கணவாய் மீன் 50 கிலோ வரையிலும் கிடைத்திருந்தன. இதை தவிர சங்காயம் போன்ற மீன்கள் 1 டன் வரை என கிடைத்திருந்தது.
தடை காலத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்டு வந்த கடற்கரை நேற்று மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பியதால் காலை முதல் மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களை பிரித் தெடுப்பதிலும், வியாபாரிகளிடம் கொடுப்பதிலும் மும்மரமாக ஈடுபட்டிருந்ததால் ராமேசுவரம் துறைமுக கடற்கரை பகுதி நேற்று முதல் மீண்டும் களைகட்டியது.
61 நாட் களுக்கு பிறகு மீன் பிடித்து வந்த மீனவர் களுக்கு இறால் மீன்கள் அதிகஅளவில் கிடைத்தும் உரிய விலை கிடைக்காததால் ஒட்டு மொத்த மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:– தடை காலம் முடிந்து 61 நாட் களுக்கு பிறகு மீன் பிடித்து வந்ததி இறால் மீன்கள் ஒரளவுக்கு கிடைத்துள்ள போதிலும் விலையோ குறைவாகவே உள்ளது. 600 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குவார்கள் என்று எதிர்பார்த்த இறால் மீன் 1 கிலோ ரூ.500–க்கு தான் விலை போனது.இறால் மீனின் விலையை இடைத்தரகர்கள் மூலம் கம்பெனிகாரர்கள் குறைத்து விலை நிர்ணயம் செய்து விட்டனர்.
இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம்.மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீனின் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒட்டு மொத்த மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக மீன் பிடித்து வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.