திருப்பூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரக்கொலை முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகள்


திருப்பூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரக்கொலை முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகள்
x
தினத்தந்தி 17 Jun 2018 10:30 PM GMT (Updated: 17 Jun 2018 8:11 PM GMT)

திருப்பூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடைய முகத்தை வெறியில் மர்ம ஆசாமிகள் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த வித்யாலயம் ஆத்தாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (35). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை.

இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரியா, கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி அங்குள்ள தனியார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் சரவணன் மட்டும் வீட்டில் தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். திருப்பூரில் அவர் தங்கி இருந்தாலும், தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கு செல்போனில் மனைவியிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி கடந்த 8–ந்தேதி இரவு 9 மணிக்கு அவர், தனது மனைவியிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அவர் கூறியபடி மறுநாள் காலை 9 மணிக்கு போனில் தொடர்பு கொள்ளவில்லை.

இதனால் கணவரிடம் இருந்து போன் அழைப்பு வரும் என்று காத்திருந்த ஜெயப்பிரியா ஏமாற்றம் அடைந்தார். அதன் பிறகு அவர் தன்னுடைய செல்போனில் இருந்து சரவணனுக்கு அழைத்தார். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து முயற்சி செய்தும் செல்போன் பயன்பாட்டில் இல்லை. இதையடுத்து சரவணனின் தம்பி முருகராஜராகவனை (44) செல்போனில் தொடர்பு கொண்ட ஜெயப்பிரியா ‘‘ சரவணனின் செல்போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே இதுகுறித்து நேரில் சென்று பார்க்குமாறு’’ கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியில் இருந்ததால் உடனடியாக அங்கு போகவில்லை’’ என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் சரவணன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சரவணனின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்றனர். அங்கு குளியலறையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சரவணனை ஹாலோ பிளாக் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு, அதே கல்லால் அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து, முகத்தின் மீது ஹாலோ பிளாக் கல்லை வைத்து விட்டு பின் வாசல் வழியாக தப்பி சென்று உள்ளனர். அதாவது வீட்டிற்குள் வந்த ஆசாமிகள், சரவணனை கொன்று விட்டு, முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு பின் பக்க வாசல் வழியாக தப்பி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் கொலை செய்யப்பட்ட தகவல் அவருடைய மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதற்கிடையில் சரவணன் குடியிருந்த வீட்டையொட்டி உள்ள வீட்டில் குடியிருந்த ஒருவர் வீட்டை பூட்டி விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரவணனை கொடூரமாக கொன்ற கொலையாளிகளை கண்டுபிடித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story