வரதட்சணை கொடுமையால் தலையில் பூசும் திரவத்தை குடித்து இளம்பெண் தற்கொலை


வரதட்சணை கொடுமையால் தலையில் பூசும் திரவத்தை குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2018 10:15 PM GMT (Updated: 18 Jun 2018 6:45 PM GMT)

திட்டச்சேரி அருகே, வரதட்சணை கொடுமையால் தலையில் பூசும் திரவத்தை குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் கோட்டூர் மேலப்பாக்கம் பட்டக்கால் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி ராதிகா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தரணிகா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஜெகதீசனின் குடும்பத்தினர் ராதிகாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெகதீசனும், ராதிகாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் மனவேதனை அடைந்த ராதிகா வீட்டில் இருந்த தலைக்கு சாயம் பூசும் திரவத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ராதிகாவை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராதிகாவின் சகோதரர் மாதவன் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெகதீசனுக்கும், ராதிகாவுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story