பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2018 11:15 PM GMT (Updated: 19 Jun 2018 7:03 PM GMT)

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவர் அதே பகுதியில் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1½ சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இதற்காக பத்திரமும் பதிவு செய்துவிட்டார். இந்த நிலையில் அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக ஜமாபந்தி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்திருந்தார்.

இதற்கிடையே பட்டா மாறுதல் செய்து தருவதாக, பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நில அளவையராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தேனி ரத்னா நகரை சேர்ந்த செல்வம் என்பவர் கோவிந்தராஜிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரிடம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தராஜ் கொடுத்ததாக தெரிகிறது. மீதி ரூ.13 ஆயிரத்தை வழங்கும்படி செல்வம் கேட்டுள்ளார்.

அதற்கு கோவிந்தராஜ் மிகவும் சிரமப்படுவதாகவும், பணத்தை குறைத்து கொள்ளவேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு செல்வம் ரூ.10 ஆயிரம் தரும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தேனியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோவிந்தராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரூ.10 ஆயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை நகராட்சி அலுவலகத்துக்கு சென்று செல்வத்திடம் அவர் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்த பணத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story