மாணவி தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
திருப்பூரில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பா நீதி விசாரணை நடத்தக்கோரி பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் 10–ம் வகுப்பு மாணவி தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்த கோரி அரசு பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவும் வழங்கப்பட்டது.
திருப்பூர் செட்டிபாளையத்தை அடுத்த அன்னையம்பாளையம் பகுதியை சேர்ந்த காவியா ஸ்ரீ (வயது 16). அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 12–ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி, வீட்டில் உள்ள குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவி காவியா ஸ்ரீ சம்பவத்தன்று வகுப்பில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததால் வகுப்பு ஆசிரியை அவரை அழைத்து கண்டித்து, அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.
எனவே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பில் செயலாளர் சிகாமணி தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வி.கே. அரசு பள்ளி முன்பு திரண்டு முற்றுகையிட முயன்றனர். பின்னர் பள்ளி முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் 2 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், உடனடியாக போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டனர். இதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்ன ராமசாமியை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு தலைவர் செல்வக்குமார், பொருளாளர் ராஜாமணி, துணை செயலாளர் அருள், துணை தலைவர் சதீஸ், நிர்வாகிகள் பிரதாப், மகாலிங்கம், விக்னேஷ், கதிர்வேல், சம்சீர், அகமது, கேசவன், சந்தோஸ் மற்றும் மாணவி காவியா ஸ்ரீயின் உறவினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.