காட்டு யானை தாக்கி விவசாயி சாவு: பொதுமக்கள் சாலை மறியல்


காட்டு யானை தாக்கி விவசாயி சாவு: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jun 2018 3:30 AM IST (Updated: 21 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொழிஞ்சாம்பாறை,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள முண்டூரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 51). இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு சென்று விட்டு மாலை 5½ மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மறைவில் நின்ற காட்டு யானை பிரபாகரனை துரத்தியது. இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் பிரபாகரனால் வேகமாக ஓட முடியாததால் யானையிடம் சிக்கிக்கொண்டார். பின்னர் அந்த காட்டு யானை அவரை பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாலக்காடு வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலக்காடு பகுதியில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

கடந்த 7 வாரங்களுக்கு முன்பு 3 காட்டு யானைகள் முண்டூர், ஒத்தப்பாலம், பாலக்காடு ரெயில் நிலையம் பகுதியில் புகுந்து அங்கிருந்த வீடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரபாகரன் சாவை தடுத்து இருக்கலாம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story