மின்இணைப்பு வழங்க ரூ.700 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் கைது


மின்இணைப்பு வழங்க ரூ.700 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்பு வழங்க ரூ.700 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் ராஜாக்கள்பாளையம் பகுதியை சேர்ந்த நாகூர்கனி என்பவருடைய மகன் சீனிஇப்ராகிம். இவர் தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு வாலிநோக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பத்து இருந்தாராம். கடந்த 1993–ம் ஆண்டு அப்போதைய மின்வாரிய இளநிலை பொறியாளர் கோவில்பட்டி குழந்தைவேல் மகன் சண்முகசடாட்சரம் என்பவர் ரூ.700 லஞ்சம் கேட்டாராம். தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்.

இதுகுறித்து சீனி இப்ராகிம் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சண்முகசடாட்சரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு மார்ச் மாதம் 23–ந்தேதி இளநிலை பொறியாளர் சண்முக சடாட்சரத்திற்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சண்முக சடாட்சரத்திற்கு கீழ்கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிபதி மேற்கண்ட சண்முக சடாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளர் சண்முக சடாட்சரத்தை (வயது77) கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story