விபத்து ஏற்படுவதை தவிர்க்க 20 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது, அதிகாரி தகவல்


விபத்து ஏற்படுவதை தவிர்க்க 20 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது, அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க 20 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதி முக்கிய சந்திப்பாக உள்ளது. குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் இருந்து நெடுஞ்சாலை வழியாக ஊட்டி வரும் வாகனங்கள் சேரிங்கிராசை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. சுற்றுலா தலமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வார விடுமுறை நாட்களில் அதிக வாகனங் கள் வருகின்றன. ஊட்டியிலும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த மே மாதம் கோடை சீசனையொட்டி, சேரிங்கிராஸ் பகுதியில் சுற்றுலா பயணிகள் கலெக்டர் அலுவலக சாலை வழியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றி செல்லாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சீசன் முடிந்து விட்டதால் சேரிங்கிராஸ் சிக்னல் வழியாக வழக்கம்போல் வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. எனவே சேரிங்கிராசில் தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கவும், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேரிங்கிராசில் வேகத்தடை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் தார்ச்சாலை அகற்றப்பட்டு மண், சிமெண்ட் மற்றும் இன்டர்லாக் கற்கள் போடப்படுகிறது. அதன் மீது தார்ச்சாலையுடன் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் கூறியதாவது:–

மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் இதர சாலைகள் தேசிய நெடுஞ்சாலையுடன் சந்திக்கும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஊட்டி– குன்னூர் சாலை லவ்டேல் சந்திப்பு, ஊட்டி– கூடலூர் சாலை அத்திக்கல் பகுதி, மஞ்சூர் சாலை உள்பட நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் ரூ.6 லட்சம் செலவில் வேகத்தடை அமைக்கப்படுகிறது.

வேகத்தடையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், இரவிலும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை கவனித்து வாகனங்களை மெதுவாக இயக்க முடியும். இதன் மூலம் சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story