மனைவியை பழி வாங்க கொலை நாடகமாடியவர் கைது


மனைவியை பழி வாங்க கொலை நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2018 4:54 AM IST (Updated: 27 Jun 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை பழிவாங்க கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளாக மிராரோட்டில் பதுங்கியிருந்த அவர் தற்போது போலீசாரிடம் சிக்கினார்.

தானே,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பன்னேலால் (வயது37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிரிந்து வாழ்ந்து வரும் தனது மனைவியை பார்க்கச்சென்றார். அதன் பிறகு பன்னேலால் வீடு திரும்பவில்லை. பன்னேலால் குடும்பத்தினர் அவரை, பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரை போலீசார் ஏற்கவில்லை.

இதையடுத்து பன்னேலால் குடும்பத்தினர் கோர்ட்டில் முறையிட்டனர். கோர்ட்டு உத்தரவை அடுத்து பன்னேலாலை கொலை செய்ததாக அவரது மனைவி, குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மிராரோடு பகுதியில் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக போலி பெயர், அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உத்தரபிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பன்னேலால் என்பது தெரியவந்தது.

பன்னேலால் தன்னை பிரிந்து வாழும் மனைவி, அவரது குடும்பத்தினரை பழிவாங்க முடிவு செய்து, கொலை செய்யப்பட்டதாக நாடகமாடி உள்ளார். இதற்கு பன்னேலாலின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

எனவே அவர் சம்பவத்தன்று மனைவியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு, மிராரோட்டிற்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உள்ளார். இதன் மூலம் மனைவி, அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைப்பார்கள் என நினைத்து இருந்தார். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கிவிட்டார்.

கொலை செய்யப்பட்டதாக நாடமாடிய பன்னேலாலை கைது செய்த போலீசார் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story