20-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது


20-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

20-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்குவதால், நாடுமுழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

சேலம்,

தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்க பொது செயலாளர் சண்முகப்பா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் உள்ள 379 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்றும், ஆனால் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள சுமார் 68 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. இதில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் சுங்க வரி கட்டுகிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் டீசலுக்கான வரியை விலக்கிக்கொள்ள வேண்டும்.

அதே போன்று 6 மாதத்திற்கு ஒரு முறை டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். வருமான வரியாக ரூ.1000 வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே 3 முறை போராட்டம் நடத்தி உள்ளோம். மனுவாகவும் எழுதி கொடுத்து உள்ளோம். ஆனால் இன்னும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வில்லை.

எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் கியாஸ் லாரி உரிமையாளர்களும் பங்கேற்பதாக கூறியுள்ளனர். பெட்ரோல்-டீசல் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு உள்ளோம். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 68 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நேரடியாக 3 கோடி பேர் பாதிப்படைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டுக்கு ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story