பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2018 5:00 AM IST (Updated: 30 Jun 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த மே மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கீழ்பவானி வாய்க்கால் மூலமாக ஓடத்துறை குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு புகார் மனு அனுப்பினோம். அப்போது, தண்ணீர் திருட்டு நடக்கவில்லை என்று பவானிசாகர் அணை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதேசமயம், கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் தாமோதரன் அளித்த பதில் கடிதத்தில், வாய்க்காலின் உட்புறமாக சிலர் கற்களை அடுக்கி வைத்து ஓடைக்கு தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர் என்றும், அதுதொடர்பாக சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறி உள்ளார். எனவே முரண்பட்ட கருத்துகளை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான சந்தன மரக்கன்றுகளும், செம்மர கன்றுகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானிசாகர் அணையில் 75 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. மேலும், வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பதற்கு பதிலாக பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது கூறியதாவது:-

ஓடத்துறை குளத்துக்கு தண்ணீர் திறப்பு பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன். அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எவ்வளவு சந்தன மரக்கன்றுகள் தேவைப்படும் என்பதை மனுவாக எழுதி விவசாயிகள் சங்கங்கள் மூலமாக கொடுக்க வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க பாசன சபையினரை கலந்து ஆலோசித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதிகாரியை கண்டித்த கலெக்டர்

வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசும்போது, “வைரமங்கலம் கிளை வாய்க்காலில் பலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அளவீடு பணிகளை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்”, என்றார்.

இதனால் கோபம் அடைந்த கலெக்டர் பிரபாகர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரியை கண்டித்தார். அப்போது கலெக்டர் பிரபாகர் கூறுகையில், “மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. அடுத்த மாதம் நடத்தப்படும் கூட்டத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்றால், நீங்கள் சேலையை கட்டி கொண்டு தான் கூட்டத்துக்கு வர வேண்டும். உடனடியாக அளவீடு பணிகளை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்”, என்று உத்தரவிட்டார்.

Next Story