சாத்தான்குளம் அருகே நடந்த டிரைவர் கொலை வழக்கில் நாங்குநேரி கோர்ட்டில் 3 பேர் சரண்
சாத்தான்குளம் அருகே நடந்த டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் சரணடைந்தனர்.
நாங்குநேரி,
சாத்தான்குளம் அருகே நடந்த டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் சரணடைந்தனர்.
டிரைவர் கொலைதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்துக்கு செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் மகிபாலன் (வயது 33) என்பதும், இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
மேலப்பாளைத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளில் தொடர் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது அந்த வீடுகளில் மகிபாலன் திருடி இருக்கலாம் என்று சிலர் சந்தேகித்தனர். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மகிபாலன் வீட்டுக்கு சென்ற 2 பேர் சாத்தான்குளத்துக்கு சவாரிக்கு வருமாறு அவரை அழைத்து சென்றனர். பின்னர் காருடன் சென்ற மகிபாலன் மாயமானார். இந்த நிலையில் மகிபாலன் சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். எனவே மகிபாலனை மர்ம நபர்கள் சவாரிக்கு அழைத்து சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லா இடத்தில் அடித்து கொலை செய்து விட்டு, காரை கடத்தி சென்று இருக்கலாம். அல்லது முன்விரோதத்தில் அவரை கொன்று விட்டு காரை எடுத்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
3 பேர் கோர்ட்டில் சரண்மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரை சேர்ந்த விஜயபிரதாப் (25), சாந்தி நகர் 16–வது தெருவை சேர்ந்த டினோத், சமாதானபுரம் சத்யா தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.