கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளி கைது: கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளி கைது: கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 6:40 PM GMT)

திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்த குற்றவாளியை கைது செய்த கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்–ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முனீஸ்வரன். சிங்காநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட இருகூர் ரோட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 5–ந் தேதி ஆட்டோ டிரைவர் சிட்டிபாபு(44) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தேடி வந்தார். இதில் தொடர்புடைய குற்றவாளி சந்தோஷ் என்பவர் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைய சென்றார். இதை அறிந்த இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் திருப்பூர் சென்றார். அங்கு கோர்ட்டில் சரண் அடைந்த சந்தோசை கோர்ட்டு அறைக்குள் சென்று இன்ஸ்பெக்டர் பிடித்து கைது செய்து ஜீப்பில் ஏற்ற முயன்றார். இதை பார்த்த வக்கீல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருப்பூர் கோர்ட்டு நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கை குறித்து ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து விசாரணை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக் டர் முனீஸ்வரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த அறிக்கை, தமிழக டி.ஜி.பி.க்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரனை இடமாற்றம் செய்து, தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். தெற்கு மண்டல பகுதிக்கு மாற்றப்பட்டு உடனடியாக செல்லுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ள அவர், தெற்கு மண்டல பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏதாவது ஒன்றில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.


Next Story