தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 என்ஜினீயர்கள் மூச்சுத்திணறி சாவு - விஷவாயு தாக்கியதா? போலீஸ் விசாரணை


தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 என்ஜினீயர்கள் மூச்சுத்திணறி சாவு - விஷவாயு தாக்கியதா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 July 2018 4:00 AM IST (Updated: 12 July 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே ‘பாய்லர்’ சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழக என்ஜினீயர் உள்பட 3 என்ஜினீயர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். அவர்கள் விஷவாயு தாக்கி இறந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ‘பாய்லர்’ ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் திடீரென்று மயங்கி விழுந்தனர்.

இதைப்பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக அவர்கள் 4 பேரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரோஹள்ளி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின்போது, கோலார் மாவட்டம் முல்பாகலை சேர்ந்த லோகேஷ், ராமநகர் மாவட்டம் கொட்டிகேஹள்ளியை சேர்ந்த மகேஷ், தமிழ்நாடு பெரம்பூரை சேர்ந்த சரவணா ஆகியோர் இறந்ததும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரின் பெயர் விலிகன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் தொழிற்சாலையில் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், ‘பாய்லர்‘ உள்ளே இறங்கியபோது ஆக்சிஜன் வாயு குறைவால் அவர்கள் இறந்தனரா? அல்லது விஷவாயு தாக்கியதால் அவர்கள் மயங்கி விழுந்து இறந்தனரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story