விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் 6 பேர் சிக்கினர்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் 6 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). இவர் பால் விற்பனை மற்றும் மாட்டு வண்டி மூலம் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்துவந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரையான்பேட் பகுதி முகாம் துணைச் செயலாளராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை பால் சப்ளை செய்வதற்காக இளவரசன் கணுவாப்பேட்டில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்துக்கு அவரது நண்பர் இனியனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்தில் பாலை ஊற்றிவிட்டு, இளவரசனும், இனியனும் கரையான்பேட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கணுவாப்பேட் அங்காளம்மன் கோவில் அருகே 3 மோட்டார் சைக்கிள்களில் எதிரே முகமூடி அணிந்து வந்த ஒரு மர்ம கும்பல் இளவரசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றது. இந்த சம்பவத்தின்போது இளவரசனுடன் வந்திருந்த இனியன் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணல் அள்ளும் தகராறில் கணுவாப்பேட்டையை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளவரசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கணுவாப்பேட் பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த 10–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று இரவு 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இளவரசன் படுகொலை செய்யப்பட்டதற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Next Story