சிவகாசி நகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனை: மேலும் 18 மின்மோட்டார்கள் பறிமுதல்
சிவகாசி நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் சோதனையில், மேலும் 18 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி திருட்டுத்தனமாக தண்ணீரை உறிஞ்சுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் முகமது சிராஜ் உத்தரவின் பேரில் நகராட்சி என்ஜினீயர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகள் தோறும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 15 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தநிலையில் அதிகாரிகளின் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் மேலும் 18 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் கடந்த 5 நாட்கள் நடத்திய திடீர் ஆய்வில் மொத்தம் 33 மின்மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளனர். மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுத்தவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு, தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று என்ஜினீயர் சீனிவாசன் தெரிவித்தார்.