ஜெயலலிதா பேரவையின் சைக்கிள் பேரணி மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியது
ஜெயலலிதா பேரவையின் சைக்கிள் பேரணி மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி மதுரையில் கடந்த 16–ந்தேதி தொடங்கியது. இதில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்கள் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு கிராமமாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பேரணி நேற்று காலை செக்கானூரணியில் தொடங்கி நாகமலைபுதுக்கோட்டை, விராட்டிபத்து, காளவாசல், அரசரடி, சிம்மக்கல் வழியாக அண்ணாநகர் பகுதிக்கு வந்தது. அங்கு மாலையில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அதில் அமைச்சர் பேசியதாவது:– மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் நடந்த இந்த பேரணி, மதுரை மாநகர் அம்மா திடலில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் தெரிவித்தனர். இது நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமைவதோடு, அதற்கான பிரசார தொடக்கமாகவும், பேரவையின் பிரசாரம் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சைக்கிள் பேரணி மூலம் அரசின் சாதனைகள் மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதியிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.