நிதி மசோதாவிற்கு அனுமதி வழங்க காலதாமதம்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும், அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
நிதி மசோதாவிற்கு அனுமதி வழங்க காலதாமதப்படுத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சட்டசபையில் அரசு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோரை சந்தித்து அளிக்க அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லிக்கு வரவேண்டும் என்று முதல்–அமைச்சர் அழைத்தார். அதனையேற்று தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் டெல்லி செல்ல உள்ளோம்.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் இருந்த காலத்தில் மத்திய அமைச்சரவையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அதன்பின்னர் அமைந்த ஆட்சி மாற்றத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்துக்கு பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்படவும், நிர்வாகம் செம்மையாக இருக்கவும், சட்டசபை அறிவிப்புகள் உடனே மக்களை சென்றடையவும், நிதி நிலை சீரடையவும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என அ.தி.மு.க. கருதுகிறது.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 18–ந் தேதி வரை அனைத்து துறைகள் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் நடைபெற்றது. மேலும் வழக்கமான முறையில் நிதி சம்பந்தமான மசோதாவிற்கு அனுமதி கேட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. சட்டசபையில் விவாதம் நடத்தி நிதி ஒதுக்கிய பின்னர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அதன் மீது கேள்வி எழுப்பவோ, கையெழுத்திட மறுக்கவோ, காலதாமதம் செய்யவோ அவருக்கு உரிமையில்லை.
இந்த நிலையில் வருகிற 26–ந் தேதிவரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்திருந்த நிலையில் ஏன் 19–ந் தேதியே முடிக்கப்பட்டது என்று கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தவறானது. சட்டசபையை எப்போது நடத்த வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்று சபாநாயகரும், சட்டமன்ற அலுவல் குழுவும் முடிவு எடுக்கும்.
நிதி மசோதாவிற்கு அனுமதி அளிக்காதது நடைமுறையில் இல்லாத ஒன்று. இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த மசோதாவிற்கு அனுமதி கொடுத்திருப்பது அழகல்ல. எவ்வளவோ விஷயங்களில் கவர்னருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நேர்மையானவர், நியாயமானவர் என்ற எண்ணம் இருந்தது. தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் அவர் கட்சி தலைவரைப் போன்று செயல்படுகிறார்.
முதல்–அமைச்சரும், கவர்னரும் தங்கள் பதவிக்கு உரிய மாண்பினை மறந்து செயல்பட்டு வருகின்றனர். முதல்–அமைச்சர் காங்கிரஸ் கட்சிகாரரை போலும், கவர்னர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் போலும் செயல்பட்டு வருகின்றனர். நிதி மசோதாவிற்கு அனுமதி வழங்க கவர்னர் ஏன் காலம் தாழ்த்தினார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும். நிதி மசோதாவிற்கு அனுமதி அளிக்காததன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை கவர்னர் அவமதித்துள்ளார். நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதா? இல்லையா? என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.