திருப்பூர், அவினாசி, காங்கேயம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர், அவினாசி, காங்கேயம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
காங்கேயம் சத்தியா நகரை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், காங்கேயம் தாலுகா வீரணம்பாளையம் ஊராட்சி படியாண்டிபாளையம் புதூர் அருகில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் சத்தியாநகர், பெரியார்நகர், கணபதிநகர், காந்திநகர், போக்குவரத்து நகர், படியாண்டிபாளையம், படியாண்டிபாளையம் காலனி, படியாண்டிபாளையம் புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள். திறந்தவெளியை அப்பகுதி மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். மதுக்கடை இந்த பகுதியில் அமைந்தால் பெண்கள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பள்ளி மாணவ–மாணவிகள் செல்லும் முக்கிய சாலையோரம் மதுக்கடை அமைந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். எங்கள் பகுதியில் போதுமான பஸ் வசதியில்லை. அடிப்படை வசதிகள் இல்லாதபட்சத்தில் மதுக்கடையை திறந்து மேலும் மக்களை சிரமத்துக்குள்ளாக வேண்டாம் என்று கூறியிருந்தனர்.
திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனுவில், புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செல்லும் வழியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடை வராது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி மீண்டும் அங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டது. அப்போது அனைத்துக்கட்சியினர் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது அங்கு வந்த திருப்பூர் வடக்கு தாசில்தார், இங்கு மதுபான கடை வராது என்று உறுதி அளித்தார். ஆனால் கடந்த 20–ந் தேதி மீண்டும் மதுபான கடை திறக்கப்பட்டது. அதன்பிறகு போராட்டம் நடத்தினோம். எனவே இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடி பொதுமக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் வீரபாண்டி மூலக்கடை தனலட்சுமி நகர், ஏ.பி.நகர், தாய்நகர், செல்விநகர், திருவள்ளுவர் நகர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நொச்சிப்பாளையம் ரோட்டில் திரும்பும் வளைவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த ரோட்டில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் பள்ளி மாணவ–மாணவிகள் அந்த வழியாக செல்வதற்கு சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
அவினாசி அருகே தெக்கலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் எங்கள் பகுதியில் தொலைபேசி நிலையம், ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்கள், சத்துணவு கூடம், கால்நடை மருத்துவமனை, கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
தெக்கலூர், ஏரிப்பாளையம், காமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் தான் டாஸ்மாக் கடை அமைய உள்ளது. இதனால் மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நேற்று நடந்த முகாமில், 248 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் வட்ட வழங்கல் துறையின் சார்பில் 22 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார கொண்டாட்டத்தில் கட்டுரை, வினாடி–வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.