கேரளாவில் கல்வீச்சில் இறந்ததாக கூறப்பட்ட லாரி கிளீனர் காதல் விவகாரத்தில் ஆணவ கொலையா? போலீசார் விசாரணை


கேரளாவில் கல்வீச்சில் இறந்ததாக கூறப்பட்ட லாரி கிளீனர் காதல் விவகாரத்தில் ஆணவ கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கல்வீச்சில் இறந்ததாக கூறப்பட்ட லாரி கிளீனர், காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலத்துக்கு சென்றது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நூருல்லா(வயது26) லாரியை ஓட்டிச்சென்றார். அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்த விஜய் என்ற முபாரக் பாட்சா(21) கிளீனராக இந்த லாரியில் சென்றார்.

கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியில் லாரி சென்றபோது, ஒரு கும்பல் லாரியை கல்வீசி தாக்கியதாகவும், இதில் கிளீனர் விஜய் மார்பில் கல் தாக்கியதில் படுகாயம் அடைந்ததாகவும், தனக்கும் காயம் ஏற்பட்டதாகவும் டிரைவர் நூருல்லா கூறினார். படுகாயத்துடன் இருந்த அவரை பாலக்காடு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறினார். வீசப்பட்ட கல்லையும் நூருல்லா போலீசாரிடம் காண்பித்தார்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதால் கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரைவர் நூருல்லாவிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால் கேரள போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

முதலில் கேரள மாநிலம் கஞ்சிக்கோடு அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் லாரியை மறித்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறினார். பின்னர் கோவைக்கும் வாளையாறுக்கும் இடையே எட்டிமடை என்ற இடத்தில் வைத்து கும்பல் கல்வீசி தாக்கியதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து எட்டிமடை பகுதிக்கு வந்து கேரள போலீசார் விசாரணை நடத்தினார்கள். டிரைவர் கூறிய இடத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதற்கான அறிகுறிகளோ, கண்ணாடி சிதறல்களோ இல்லை என்று தெரியவந்தது.

மேலும் கேரளா பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கிளீனர் மயக்க நிலையில் இருப்பதையும், டிரைவர் அவரை லாரியில் இருந்து இறக்கி கூட்டிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் விஜய்யின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் மார்பில் ஏற்பட்ட ஆழமான காயம்தான் மரணத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சில் இத்தனை பெரிய காயம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு தாக்குதல் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. இது போலீசாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கேரள போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அவர்கள் கூறியதாவது:–

விஜய், வேறு ஒரு மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதற்காக விஜய் தன்னுடைய பெயரையும் மாற்றியுள்ளார். இது சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் லாரியில் விஜய் வருவதை அறிந்து, பின்தொடர்ந்து வந்து லாரியை வழிமறித்து விஜய்யை தாக்கியுள்ளதாகவும், இதில் அவர் இறந்து போனதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு டிரைவர் நூருல்லாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக நூருல்லா உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது ஒரு ஆணவ கொலையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

விஜய் மீதான தாக்குதல் சம்பவம் கோவை பகுதியில் நடைபெற்று இருப்பதால் கே.ஜி.சாவடி போலீசிடம் இந்த வழக்கை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story