சர்க்கரை ஆலை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


சர்க்கரை ஆலை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 25 July 2018 3:30 AM IST (Updated: 25 July 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் நேற்று விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர், முண்டியம்பாக்கம், மதுராகொசப்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை வழியாக செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பல ஆண்டுகளாக இயங்கவில்லை. ரெயில்வே நிர்வாக பணிகளுக்காக இந்த வழியை அடைத்து சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி சாலையை துண்டித்துள்ளனர். ஆனால் இன்று வரை அந்த வழியை ரெயில்வே நிர்வாகம் சரிசெய்வதாக தெரியவில்லை.

இந்த வழியை அடைத்ததால் அந்த வழியாக செல்ல முடியாமல் கொசப்பாளையத்தில் உள்ள ரெயில்வே கேட் வழியாக கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வழி, ரெயில் நிலையம் அருகில் உள்ளதாலும், தினமும் சரக்கு ரெயில் வருவதாலும் சரக்கு இறக்கிய பிறகு காலி பெட்டிகளை இணைப்பதற்கும் கார்டு பெட்டியை முன்புறமாக இருந்து பின்புறம் இணைக்க வேண்டியதாலும் கொசப்பாளையம் ரெயில்வே கேட்டையும் பல மணி நேரம் அடைத்து வைக்கின்றனர்.

இதனால் அந்த வழியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் என அனைத்து வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை சாலையை சீரமைத்து அதன் அருகில் உள்ள ரெயில்வே கேட்டை சரிசெய்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story